Wednesday, May 9, 2012

என்றென்றும் பலஸ்தீன்...

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது.


மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.
ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.
அது எழவே செய்யும்.

No comments:

Post a Comment