Wednesday, April 18, 2012

அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் ஓர் அறிமுகம்

இஸ்லாமிய தூது பற்றிய இஹ்வான்களின் கண்ணோட்டம் (பாகம் 01)



இமாம் ஹஸனுல் பன்னா 'இஹ்வானுல் முஸ்லிம்களின் இஸ்லாம்' என்ற தலைப்பில் பல விடயங்களைப் பின்வருமாறு பேசுகின்றார்:
  தலைவர்களே நான் இஹ்வான்களின் இஸ்லாம் என்ற சொல்லை பயன்படுத்தியமைக்காக நீங்கள் என்னை மன்னித்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ்விடமிருந்து நபியவர்கள் கொண்டு வந்த தூதை விடவும் இஹ்வான்கள் புதிதாக ஒரு தூதை கொண்டுவந்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவ்வாறு நான் கூறவும் இல்லை.
  உண்மையில் நான் இங்கு நாடவருகின்ற கருத்து அதிகமான சந்தர்ப்பங்களில் அதிகமான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முழுமையான வழிகாட்டலிலிருந்து பலவற்றை பின்பற்றாமல் விட்டுவிடுகின்றனர். இஸ்லாத்தின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையையும், அதன் விரிந்த தன்மையையும் பலரும் தீய நோக்கில் பயன்படுத்த முனைகின்றனர். இதன் விளைவாக இஸ்லாத்தின் முக்கியமான பல பண்புகளை அதிலிருந்து தூரமாக்கிவிட்டனர்.
  இஸ்லாம் என்ற தூது மிக உயர்ந்த நோக்கங்களுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், முஸ்லிம்களோ இஸ்லாத்தை விளங்கிக்கொள்வதில் மிகப்பாரியளவு கருத்துவேறுபாடுபட்டுள்ளனர். இஸ்லாத்தைப்பற்றி வளர்ந்து வரும் சமூகத்தவர்களிடம் தங்களது பிழையான சிந்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். சிலபோது இந்த சிந்தனைகள் இஸ்லாத்திற்கு கொஞ்சம் நெருக்கமானதாக இருந்தாலும் பெரும்பாலும் அவை இஸ்லாத்தை விட்டும் மிகவும் தூரமானதாகவே இருக்கின்றன.

  ஆனாலும், சில சந்தர்ப்பங்களில் நபியவர்களுடைய சமூகத்தவர்கள் நடைமுறைப்படுத்தியதைப்போன்று நடைமுறைப்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
  சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இஸ்லாத்தை வெளிப்படையான வணக்கங்களுடன் மாத்திரம் சுருக்கி விளங்கி வைத்திருக்கிறார்கள். இவற்றை மாத்திரம் நிறைவேற்றிவிட்டால் அல்லது அவ்வாறு நிறைவேற்றுகின்ற ஒருவரைக்கண்டுவிட்டால் அவர்கள் திருப்தியடைந்து விடுகின்றார்கள். இஸ்லாத்தின் ஆழத்திற்கே சென்றுவிட்டோம் என்று திருப்தியோடு எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.
  சிலருடைய பார்வையில் இஸ்லாம் என்பது சிறந்த ஒழுக்க பண்பாடுகள், ஊற்றெடுக்கும் ஆன்மீக பெறுமானங்கள், ஆன்மாவுக்கு தேவைப்படும் தத்துவ ரீதியான உணர்வுகள். இவற்றின் மூலமாக அநியாயமான சட உலகின் தீங்குகளிலிருந்து தூரமாகி வாழவேண்டும் என்று நினைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
  மற்றும் சிலர் இஸ்லாம் என்றாலே அங்கு அற்புதங்கள் தொழிற்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அற்புதங்களை விட்டு வேறு மார்க்கத்தை சிந்திப்பதற்கு கூட இவர்கள் தயாராக இல்லை.
  வேறு சிலரோ இஸ்லாம் என்பதே நாம் வாரிசாகப்பெற்றுக்கொண்ட சில நம்பிக்கை சம்பிரதாயங்கள் அவற்றை நாம் கண்மூடியவர்களாகப் பின்பற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால், இஸ்லாத்திற்கு இவற்றில் எந்தத் தேவையுமில்லை. இவற்றோடு இஸ்;லாம் முன்னேறப் போவதுமில்லை.
  இஸ்லாத்தை இவ்வாறு தான் முஸ்லிம்கள் விளங்கியிருக்கின்றார்கள். குறிப்பாக அந்நிய சிந்தனைகளைப் படித்தவர்கள் அதன் தாக்கத்தினால் இஸ்லாத்தை இவ்வாறு ஒரு பக்கம் வீங்கிய நிலையில் விளக்குகின்றார்கள். (தொடரும்) இஹ்வான்தமிழ்

No comments:

Post a Comment